×

கான்கிரீட் சாலை முதற்கட்ட பணி வரும் 20ம் தேதிக்குள் முடிக்க தீவிரம் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது திருவண்ணாமலை மாட வீதியில்

திருவண்ணாமலை, அக்.6: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மாட வீதியில் கான்கிரீட் சாலை அமைக்கும் முதற்கட்ட பணிகள் வரும் 20ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதையொட்டி, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலை சுற்றியுள்ள மாட வீதிகளை, திருப்பதிக்கு இணையாக மாற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை மூலமாக சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ₹20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கான்கிரீட் சாலையின் முதற்கட்டமாக, பேகோபுர தெரு திரபுவதி அம்மன் கோயில் முதல் காந்தி சிலை வரையில் கான்கிரீட் சாலை அமைக்கப்படுகிறது. அதில், பே கோபுர வீதியில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி முழுமையாக முடிந்துவிட்டது. அதன் தொடர்ச்சியாக, பெரிய தெரு பகுதியில் தற்போது சாலை அமைக்கப்படுகிறது.

இதுவரை, 780 மீட்டர் தூரம் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அம்மணி அம்மன் கோபுரம் அருகில் இருந்து, காந்தி சிலை வரை கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நவீன இயந்திரம் மூலம் இரவு பகலாக நடந்து வருகிறது. அதையொட்டி, தற்போது சின்னக்கடை தெரு வழியாக வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மந்தலாங்குளம் தெரு வழியாக திருப்பிவிடப்படுகிறது. கார்த்திகை தீபத்திருவிழா அடுத்த மாதம் 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. எனவே, வரும் 20ம் தேதிக்குள் முதற்கட்ட பணிகளை முடிக்க நெடுஞ்சாலைத் துறையினர் திட்டமிட்டுள்ளனர். காந்தி சிலை சந்திப்பு பகுதியில் தொடங்கி, தேரடி வீதி, கடலைக்கடை சந்திப்பு, திருவூடல் தெரு ஆகிய பகுதிகளில் கான்கிரீட் சாலை அமைக்கும் இரண்டாம் கட்ட பணியை வரும் டிசம்பர் மாதம் தொடங்க உள்ளனர். விமான ஓடுதளம் அமைக்க பயன்படுத்தப்படும் அதி நவீன இயந்திரம் பயன்படுத்தி கான்கிரீட் சாலை அமைக்கப்படுவதால், திட்டமிட்ட காலத்திற்குள் பணிகள் முடியும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

The post கான்கிரீட் சாலை முதற்கட்ட பணி வரும் 20ம் தேதிக்குள் முடிக்க தீவிரம் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது திருவண்ணாமலை மாட வீதியில் appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai Mada Road ,Thiruvannamalai ,Thiruvannamalai Annamalaiyar Koil Mata Road ,
× RELATED விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர்...